Monday, September 3, 2012

ஜனாஸா.........மரணித்தவருக்காக நாம் செய்யவேண்டிய அனைத்தையும் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் நமக்கு நிறைவாக சொல்லித் தந்து விட்டார்கள். அவர்கள் ஒரு குறையும் வைக்கவில்லை. 

 وَجَاءَتْ سَكْرَةُ الْمَوْتِ بِالْحَقِّ  ۖ ذَٰلِكَ مَا كُنتَ مِنْهُ تَحِيدُ

மரண அவஸ்தை உண்மையாகவே வந்து விட்டது. எதை விட்டு ஓடிக் கொண்டிருந்தாயோ அது இதுவே. ( 50:19).
நோயாளியைத் தரிசிப்பது, உயிர் பிரியும் தருவாயிலுள்ளவருக்கு ஷஹாதாக் கலிமாவைச் சொல்லிக் கொடுப்பது, அவர் அவருடைய கண்களைக் கசக்கி மூடுவது , அவருடைய ஜனாஸாவை அவசரமாக அடக்கம் செய்வது, அவருடைய கடனை அடைப்பது, அவருடைய ஜனாஸாவை கபன் செய்வது நபிவழியாகும்.ஜனாஸாவை முத்தமிடவும் முடியும்.

மரணித்த ஒரு முஸ்லிமைக் குளிப்பாட்டுவது கடமையாகும். மரணித்தவரின் நெருங்கிய உறவினர்கள் ஜனாஸாவைக் குளிப்பாட்டுவதே சிறந்ததாகும். கனவனை மனைவியும் மனைவியைக் கணவனும் குளிப்பாட்டலாம். 
நபி சள்ளல்லாஹு அலைஹி வஸல்லம்  அவர்களின் மகளுடைய ஜனாஸாவை குளிப்பாட்டுவது பற்றி உம்மு அதிய்யா ரலியல்லாஹு அன்ஹா அறிவிக்கும் போது ”அவர்களின் தலைமுடியை மூன்று பிரிவாகப் பின்னி பின்பக்கம் போட்டோம்” என்று குறிப்பிடுகிறார். (அறிவிப்பவர்: உம்மு அதிய்யா ரலியல்லாஹு அன்ஹா  நூல்:முஸ்லிம் .
நீரையும் இலந்தை மர இலைகளையயும் கொண்டு மூன்று அல்லது ஐந்து முறைகள் ஜனாஸாவைக் கழுகலாம் அதை விட அதிகமாகவும் கழுகலாம். நீர் ஊற்றுவதை ஒற்றைப் படையாகவும் , இறுதியாக வாசனையைச் சேர்த்துக் கொள்ள வேண்டும். கழுகும் போது வலதை முற்படுத்த வேண்டும். 

ஜனாஸாவை முழுமையாக மறைக்கும்படியாக அதனைக் கபன் செய்ய வேண்டும். அவர் அணிந்திருந்த ஆடையைத் தவிர வேறாடை எதுவுமில்லாவிட்டால் அணிந்திருந்த ஆடையைக் கொண்டேனும் அவரைக் கபன் செய்யவேண்டும். அளவு கடந்து விடாது கபனாடையை தேவையான அளவுக்கு அதிகப்படுத்திக் கொள்ளலாம். ஷஹீதாக மரணித்தவர் அவர் மரணிக்கும் போது அணிந்திருந்த உடையைக் கொண்டே கபன் செய்யப்படுவார். ஜனாஸாவிலும் கபன் துனியிலும் வாசனை பூசுவது ஆகுமாகும். 
குளிப்பாட்டி கபனிடுவதற்கு முன்னர் அவருடைய கையை தொழுவதற்கு தக்பீர் கட்டுவதைப்போன்று கட்டப்படுகிற இந்த நடைமுறை , மார்க்க ஆதாரம் இல்லாத செயல்களாகும். ஒரு மனிதன் மரணித்தால் அவனது இரு கைகளும் நீட்டியே வைக்கப்படும்.
நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் யமன் சேதத்தின் பருத்தியினாலான வெண்ணிறமுள்ள மூன்று துணிகளால் கஃபன் செய்யப்பட்டார்கள். அம்மூன்றில் சட்டையோ தலைப்பாகையோ இருக்கவில்லை. புஹாரி ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹு 

மையத்தை சந்தூக் என்ற பல்லக்கில் வைத்து , பச்சை துணியால் மூடி , பூக்களினால் அலங்கரித்து , பன்னீர் தெளித்துக் கொண்டு , சில களிமாக்களையும் ஓதிக் கொண்டு செல்வது நபி வழியல்ல. பித்அத் ஆகும். மௌனமாக ஜனாஸாவை நடந்து அவசரமாக செல்லவேண்டும். ஜனாஸாவோடு நடப்பது அதை சுமப்பது என்பன நபிவழியாகும். ஆதற்கு முன்னால் செல்வதும் பின்னால் செல்வதம் சமமே. 

”ஜனாஸாவைச் (சுமந்து செல்லும் போது) விரைந்து செல்லுங்கள். அது (மய்யித்) நல்லறங்கள் புரிந்ததாயிருந்தால் அந்த நன்மையின் பால் விரைந்து செல்கிறீர்கள்; அவ்வாறில்லாவிட்டால் ஒரு தீங்கை (விரைவில்) உங்களின் தோள்களிலிருந்து இறக்கி வைக்கிறீர்கள்.”என நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். புஹாரி: அபூஹுரைரா ரலியல்லாஹு அன்ஹு. 

”ஜனாஸாத் தொழுகையில் பங்கேற்கிறவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு: அடக்கம் செய்யப்படும் வரை கலந்து கொள்கிறவருக்கு இரண்டு கீராத்கள் நன்மை உண்டு’ என்று தூதர் சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அப்போது ‘இரண்டு கீராத்கள் என்றால் என்ன?’ என வினவப்பட்டது. அதற்கவர்கள், ‘இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை)” என்றார்கள். புஹாரி அபூஹூரைரா ரலியல்லாஹு அன்ஹு.

மையித்துக்காகத் தொழுவது கடமையாகும். தற்கொலை செய்தவனுக்கு ஜனாஸாத் தொழுகை நடத்தலாம். ஜனாஸா ஆணாகவிருந்தால் தலைப்பக்கமாகவும் பெண்ணாகவிருந்தால் ஜனாஸாவின் நடுப்பக்கமாகவும் தொழுகை நடாத்துபவர் நிற்கவேண்டும். நான்கு முதல் ஒன்பது தக்பீர் வரை கூறலாம். 

இமாம் வந்து தொழுகையை ஆரம்பிக்கும் முன்னர் மக்கள் சப்புகளில் நின்றுக்கொண்டு " குள் "  சூராக்களை ஓதிக்கொண்டிருப்பது நபி வழியல்ல. இன்னும் அது பித்அத் ஆகும். ஜனாஸா தொழுகையின் பின்னரோ ஜனாஸாவை அடக்கம் செய்த பின்னரோ கூட்டாக துவா செய்வதும் பித்அத் ஆகும். அத்தோடு அடக்கிய பின்னர் தல்கீன் என்று சிலவற்றை ஓதுவது, குடத்தால் தண்ணீர் ஊற்றுவது, மல்லிகைப் பூவினால் கப்ரை அலங்கரிப்பது , 
அடையாளம் என்ற பெயரில் மையத்தின் பெயர் , இறந்த திகதி போன்றவை குறிக்கப்பட்ட பலகைகளை நாட்டுவது, உயரமாக மண்ணை நிறைத்து கப்ரை உயர்த்துவது , வரசையாக நின்று கைலாகு செய்து சலவாத்து ஓதுவது என்பனவும் பித்அத்கல் ஆகும். இவைகள் கண்டிப்பாக தவிர்க்கப்படல் வேண்டும். பெண் ஜனாசாவை திரையால் மறைத்துக் கொண்டு அடக்கம் செய்வதும் மற்றொரு பித்அத் ஆகும். கப்ரை ஒரு கல்லை கொண்டு அடையாள படுத்தலாம். 

ஜனாஸாவுக்காக ஓலமிட்டு அழுதல் நெருப்புப்பந்தங்களுடன், சந்தனக் குச்சிகளுடன் அதற்குப்பின்னால் செல்லுதல், ஆடைகளைக் கிழித்துக்கொள்ளல், ஜனாஸாவை சபித்தல் ஆகியன தடைசெய்யப்பட்டனவாகும். ஜனாஸாவுக்காக எழுந்து நிற்பது ஆரம்பத்தில் ஆகுமாக்கப்பட்டு பின்னர் தடையாக மாற்றப்பட்ட சட்டமாகும். 

அல்லாஹ்வும் , அவனது தூதரும் கூறாமல் நம்மைப் போன்ற மனிதர்கள் தங்களின்
சுயநலனுக்காகவோ , நல்ல காரியம் என்ற பெயரில் நல்ல நோக்கத்துடன் என்ற காரணத்துடன் அல்லது அறியாமை காரணமாகவோ உருவாக்கியவை இஸ்லாமாக ஆகாது.

‘ நமது கட்டளையில்லாமல் யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் ‘ என்று நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹு நூல்: முஸ்லிம்

இறந்தவருக்காக மூன்றாம் ஃபாத்திஹா , ஏழாம்ஃபாத்திஹா , நாற்பதாம் ஃபாத்திஹா , கத்தம் , வருட ஃபாத்திஹாக்கள் , இறந்தவருக்காக ஹல்கா , திக்ருகள் , ராத்திபுகள் என்று பலவிதமான சடங்குகளையும் முஸ்லிம்களில் பலர்
செய்து வருகின்றனர். இவை அனைத்தும் கட்டாயம் தவிர்க்கப்பட வேண்டும்.

ஒருவர் மரணித்து விட்டால் அவரது குடும்பத்தினர் சோகத்திலும் , கவலையிலும் இருப்பார்கள். அவர்களின் கவலையை மேலும் அதிகரிக்கும் வகையில் இறந்த அன்றோ , மறு நாளோ தடபுடலான விருந்துக்கு ஏற்பாடு செய்கின்றனர். அந்தக் குடும்பத்தினரின் உணர்வுகளைப் புரிந்து கொள்ளாமல் மனிதாபிமானமில்லாமல் அக்குடும்பத்தினரின் செலவில் விருந்துக்கு ஏற்பாடு செய்கின்றனர். இதற்கு மார்க்கத்தில் அனுமதியில்லை. 
இறந்தவரின் வீட்டுக்கு நாம் சென்றால் அவர்களுக்குத் தேவையான உணவுகளைத் தயார் செய்து எடுத்துச் சென்று நாம் தான் அவர்களுக்கு வழங்க வேண்டும். அவர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளதால் தமக்காக அவர்கள் உணவு சமைக்கும் மனநிலையில் இருக்க மாட்டார்கள். 

ஜஃபர் பின் அபீதாலிப் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் மரணித்த செய்தியை நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் மக்களுக்குஅறிவித்து விட்டு ‘ ஜஃபரின் குடும்பத்தினருக்காக நீங்கள் உணவு தயாரியுங்கள் ‘ என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஜஃபர் ரலியல்லாஹு அன்ஹு நூல்கள்:அபூதாவூத் , அஹ்மத்
, திர்மிதி, இப்னுமாஜா 

இதன் அடிப்படையில் இறந்தவரின் குடும்பத்தினருக்கு மற்றவர்கள் தான் உணவு அளிக்க வேண்டுமே தவிர அவர்கள் வீட்டில் சாப்பிடக்கூடாது என்று அறியலாம். 

0 comments:

அதிரையில் உடனடி போட்டோ

அதிரையில் உடனடி போட்டோ
இங்கு ஐந்து நிமிடத்தில் உடனடி பாஸ்போர்ட் சைஸ் போட்டோ செய்துதரப்படும். பழைய வெள்ளை படங்களை கலர் படமாக மாற்றி தரப்படும். வீடியோ எடிட்டிங் மற்றும் பிளக்ஸ் செய்துதரப்படும். உடனே வாங்க உங்கள் ரைட்டுக்கு. 78 A,பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு (மீரா மெடிக்கல் எதிரில்) அதிராம்பட்டினம். தொடர்புக்கு போன்:9791381110

SIS computer service

SIS computer service
இங்கு சிறந்த முறையில் உங்களுடைய கம்ப்யூட்டர்கள் சரி செய்து தரப்படும். இங்கு கம்ப்யூட்டர்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் அனைத்தும் கிடைக்கும். தொடர்புக்கு போன்: 9842653248, 9994644163