Sunday, May 12, 2013

மீலாத் விழா ஒரு பார்வை ...


மீலாத் விழாவினுடைய அடிப்படை நோக்கம், நபி சல்லல்லாஹு அலைஹி வசல்லம் அவர்களுடைய பிறப்பின் அற்புதங்களை எடுத்து கூறுவதும், அதன் மூலமாக அவர்களை கண்ணியப்படுத்துவதும், அவர்களுடைய சிறப்பம்சங்களை எடுத்து கூறுவதும், மக்களை ஈமானின் பக்கமும், இஸ்லாத்தின் பக்கமும் உணர்வூட்டுவதும், அவர்களின் நற்குணங்களை அறிந்து கொள்ளுவதும், சந்தோசத்தையும் முஹப்பைத்தையும் மற்றும் அவர்கள் மீதுள்ள அன்பை வெளிப்படுத்துவதும், அல்லாஹ்வுடைய அருட்கொடைகளை சொல்லி காட்டுவதும், மக்களுக்கு உணவளித்தல் போன்ற நல்ல அமல்களை செய்வதும் அதன் மூலம் நன்றியை வெளிப்படுத்துவதும் ஆகும், என்று இந்த பிறந்த நாள் விழா எடுக்கும் மக்கள் கூறுகின்றனர். 

இதனை மேலோட்டமாக பார்த்தால் சிறப்பான காரியமாக தெரியும். ஆனால் உண்மை அவ்வாறல்லா . மார்க்கத்தில் பொதுவாக எல்லா காலங்களிலும் செய்வதற்கு சிறப்பித்துக் கூறப்பட்டுள்ள விடயங்களை ஒரு குறிப்பிட்ட நாளை மையமாக கொண்டு செய்வதற்கு ஆகுமாக்கி கொண்டுள்ளார்கள் என்பது உன்னிப்பாக கவனித்தால் தெரியும். 

சரி, இவர்கள் கண்ணோட்டதிலேயே இந்த விடயத்தை அணுகி பார்த்தால் அதிலும் உண்மை இல்லை. அதாவது , நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறந்த நாள் கொண்டாட்டங்களை மார்க்கத்தில் சிறப்பித்துக் கூறப்பட்ட அமலாக மாற்றுவதற்கு ஒரு சதி முயற்சியே அன்றி வேறில்லை. அதற்காக , ரபியுல் அவ்வல் 12 ம் நாளை நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் பிறந்த தினமாக அறிவித்து கொண்டாடுகின்றார்கள். 

இந்த பிறந்த தினம் பற்றிய குறிப்பு ஆதாரப்பூர்வமான ஹதீசுகளில் இல்லை. ஆனால் அவர்கள் மரணித்த திகதி ரபியுல் அவ்வல் 12 ம் நாள் என்று ஆதாரப்பூர்வமான அறிவிப்புகள் உள்ளன. இதனை இமாம் அத் தபரி, இமாம் இப்னு கஸீர் ரஹீமஹுல்லாஹ் அன்ஹும் அஜ்மயீன் பதிய வைத்துள்ளார்கள். இவர்கள் கொண்டாடும் இந்த பிறந்த தின திகதியை சற்று அலசி பார்த்தால் உண்மை புரிந்துவிடும். 


நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிறக்கும் பொது, அவர்கள் நபி என்பதை யாரும் அறிந்ததில்லை. இன்னும், ஹிஜ்ரி கலண்டர் கணக்கெடுப்பும் இருக்கவில்லை. ஹிஜ்ரி கணக்கெடுப்பு நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் ஹிஜ்ரத்துக்கு பின் தான் துவங்குகிறது. அப்படியாயின் , இந்த பிறந்த நாள் , ரபியுல் அவ்வல் 12 ம் நாள் என்று எப்படி கணிப்பது ? ஹிஜ்ரத்துக்கு பின் தான் பிறந்தார்கள் என்று சொல்லப் போகிறார்களா ? இந்த பச்சை பொய்யை யாரும் 
ஏற்க மாட்டார்கள்.

எனவே, இந்த பிறந்த நாள் ரபியுல் அவ்வல் 12 ம் நாள் அடிப்படையே பொய்யாகும். இன்னும் இந்த பொய், நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரணத்தை கொண்டாடுவதற்கு செய்யப்பட்ட ஒரு சதி என்பதை வரலாற்றை நல்ல முறையில் பார்த்தவர்கள் அறிந்துக் கொள்ளலாம். 

அதாவது, இந்த பிறந்த நாள் கொண்டாட்டத்தை முதலில் அறிமுக படுத்தியவர்கள் 4 வது நூற்றாண்டில் தோன்றிய  "பாத்திமத்" என்ற யூத வழிதோன்ரலில் வந்த ஒரு வழிகெட்ட பிரிவினர் ஆவார்கள். 

இவர்கள் அப்துல்லாஹ் பின் மைமூன் அல்கதாஹ் என்கின்ற யூதனின் சந்ததியினரே . இந்த வழிகெட்ட பிரிவினர் எகிப்தில் ஆட்சி நிருவியபொழுது தான் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறந்த நாளை, பிறந்த நாளாக திரித்துக் கூறி கொண்டாட்டங்களை ஆரம்பித்தனர். 

ஏனெனில், இவர்கள் அலி ரலியல்லாஹு அன்ஹு தான் நபித்துவத்துக்கு தகுதியானவர்கள் என்று வாதிட்டவர்கள். இவர்கள் தான் அல் அஸ்கர் என்ற பல்கலை கலகத்தையும் நிறுவினார்கள் என்பது இங்கு குறிப்பிடத்தக்கது. 

இவ்வாறு நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் மரணத்தில் சந்தோஷப் படும் இந்த யூத பரம்பரையின் சதியை அதே பரம்பரையில் வந்த ஷியாக்களும் இவர்களுடன் நெருங்கிய சகவாசம் செய்யும் சூபியாக்களும் கொண்டாட தொடங்கினர். இன்னும், இது 1910 ம் ஆண்டு தான் முதன் முதலில் உத்தியோகபூர்வ தேசிய விழாவாக துருக்கியினால் கொண்டாடப்பட்டது. 

இவ்வாறு, இந்த பொய்யின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கொண்டாட்டத்தை மார்க்கமாக்க பலரும் அறிந்தும் அறியாமலும் முற்பட்டனர். இதில் இமாம் ஷுயுத்தி போன்றவர்களும் தப்பவில்லை. 

அந்த வகையில் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் நேசிப்பு பற்றி பொதுவாக மார்க்கம் வழியுறுத்தும் விடயங்களை இந்த குறிப்பிட்ட நாளை கொண்டாட ஆதாரமாக சுட்டிக் காட்டுகின்றனர். 

ஆனால், இந்த உம்மதுல் இஸ்லாமியாவில் , எங்கள் அனைவரையும் விட நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களை அதிகம் நேசித்த, அல்லாஹ்வினால் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு தோழர்களாக தேர்ந்து எடுக்கப்பட்ட , நபியின் நேசிப்பில் முன்னுதாரணமாக திகழ்ந்த அந்த அருமை சஹாபாக்கள் யாரும் இந்த ரபியுல் அவ்வல் 12 ம் நாளை நபியை நேசிக்கும் பிறந்த நாளாக கொண்டாடவில்லை. அவர்களுக்கு பின் வந்த தாபியீன்கள் கொண்டாடவில்லை. அவர்களை தொடர்ந்த சலபுஸ் சாளிஹீன்கள் கொண்டாடவில்லை. 

ஏன் எமது சிறப்புக்குறிய அந்த நான்கு இமாம்களும், செய்யவுமில்லை, பதியவும் இல்லை . இன்னும், குத்புத் சித்தா வின் இமாம்கள் என்று போற்றப்படக் கூடிய அந்த ஆறு கிரந்தங்களின் இமாம்களான புகாரி, முஸ்லிம், திர்மிதி, இப்னு மாஜா , அபூ தாவுத் , நஸாயி ரஹீமஹுல்லாஹ் அஜ்மயீன், யாரிடமிருந்தும் நேரடியாக ஒரு அறிவிப்பும் கொண்டு வரவும் முடியாது, அவர்கள் செய்ததுமில்லை , பதியவும் இல்லை. 

இவர்கள் அனைவரும் இஸ்லாமிய மார்க்கத்தின் வரலாறை தந்தவர்கள். 
நபியின் நேசிப்பில் எங்கள் அனைவரையும் விட சிறப்பானவர்கள் . 

ஆனால், எமது சமூகம் இஸ்லாமிய வரலாறை இமாம்களிடம் இருந்து பெறாமல் மார்டின் லிங்க் போன்ற குப்பார்களின் , இஸ்லாமிய எதிரிகளின் கிதாபுகளில் இருந்து பெற்றால் இது தான் நிலைமை. 

கிறிஸ்த்தவ சமுதாய மக்கள் ஒவ்வொரு வருடமும் டிசம்பர் மாதம் 25ம் நாள் கிறிஸ்மஸ் பண்டிகையைக் கொண்டாடுகின்றார்கள். இவர்கள் ரபியுல் அவ்வல் 12 ஐ கொண்டாடுகிறார்கள்.  பிறந்த நாள் கொண்டாட்டம் என்பது கிருஸ்தவர்களின் மத அனுஷ்டானத்தை முன்மாதிரியாகக் கொண்டு எமது சமுதாயத்துக்குள் புதிதாகப் புகுத்தப்பட்ட வழிகேடுதான் என்பதை அறிந்து கொள்ளலாம் .

எனவே, வருடத்தில் ஒரு நாளை , நபியை நேசிக்கும் ஒரு நாளாக கிருஸ்தவர்களின் மத அனுஷ்டானத்தை முன்மாதிரியாகக் கொண்டு எடுத்துக் கொள்வது மார்க்கத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட பித் அத் என்பது சந்தேகமே இல்லை. 

நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் தமது பிறந்த நாளை பற்றி குறிப்பிடும் பொது பின்வருமாறு கூறுகிறார்கள் . 

" நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் பிரதி திங்கள் தோறும் நோன்பு நோற்கும் வழக்குமுடையோராக இருந்தார்கள். அது பற்றி நபித்தோழர்கள் நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களிடம் வினவிய போது: "அந்நாளில் நான் பிறந்தேன். அதில்தான் என் மீது (அல்குர்ஆன்) இறக்கப்பட்டது" எனப் பதில் கூறினார்கள். (முஸ்லிம்).

இவ்வாறு தன்னுடைய பிறந்த நாளை நோன்பு நோற்பதில் கழித்த நபியின் முன்மாதிரி இருக்க , அந்த உத்தம நபியின் பிறந்த நாளை கொண்டாட , மௌலிது ஓத, பிறந்த நாளை சிறப்பிக்க பொது மார்க்க நிகழ்ச்சிகள் நடத்த, ஊர்வலம் செல்ல எங்கே ஆதாரம் இருக்கிறது ? 

நபியின் பிறந்த நாளில் அந்த நபியின் முன் மாதிரியை எடுக்காத இந்த சமூகங்கள், நிச்சயமாக பிறந்த நாளை அல்ல கொண்டாடுகிறார்கள் , நபி சல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறந்த நாளை தான் கொண்டாடுகிறார்கள் என்பது பட்டவர்த்தனமான உண்மையாகும். ஏனெனில், பித் அத்களை சுன்னாவாக பின்பற்றும் இந்த மக்கள், இறந்த நாளை, பிறந்த நாளாக கொண்டாடுவதில் புதுமை இல்லை. 

இந்த வரலாற்றின் அடிச்சுவட்டில் வந்த ஷீயாக்கள் தான், இன்றும் வீதி வீதியாக பட்டாசு கொழுத்தி , பாண்ட் வாத்தியம் இசைத்து ஊர்வலம் செல்வதை இலங்கையிலும் காணலாம். 

இதில் சற்று மாறுபட்டு, பச்சை கொடிகளை கையில் ஏந்தி, வீதி வீதியாக குளிர்பானங்களும் இனிப்புக்களும் பரிமாறப் பட்டு ஊர்வலம் கொண்டு செல்பவர்கள் தான் பச்சை தலைப்பாகை ஷீயா இஸ்மாயிலியா பிரிவினர் ஆவார்கள். இந்த மக்களோடு கை கோர்பவர்கள் தான் சூபியாக்கள் மற்றும் தரிக்காவாதிகள். இனம் இனத்தோடு தான் சேரும் என்பது போல வழிகேடர்கள் வழிகேடர்களுடன் இணைந்துக் கொண்டனர்.

இந்த பித் அத் ஐ  எகிப்தில் தேசிய கொண்ட்டாட நாளாக பிரகடனப்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைத்தவர் இஹ்வானுல் முஸ்லிமீன் ஹசனுள் பன்னாஹ். அவர் தான் தேர்தலில் இருந்து வாபஸ் வாங்க வைத்த இரண்டு கோரிக்கைகளில் ஒன்று தான் இந்த மீலாத் விழாவை உத்தியோக பூர்வமாக தேசிய கொண்டாட்டம் ஆக்க கோரிக்கை வைத்தது.  இந்த செய்தி அல்இஹ்வானுல் முஸ்லிமூன் அஹ்தாதுன் ஸனஅத் அத்தாரீஹ்’  (இஹ்வானுல் முஸ்லிமீன், வரலாறு படைத்த சில நிகழ்வுகள்) என்ற நூலின் முதலாம் பாகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது !!. 

இவர் இந்த பாத்திமத் பிரிவால் உருவாக்கப்பட்ட அல் அஸ்கர் பல்கலைக் கழகத்தில் பயின்றவர் என்பது இங்கு குறிப்படத்தக்கது. இதே அநியாயம் இலங்கை நாட்டிலும் செய்யப்பட்டுள்ளது.


இஸ்லாமிய மார்க்கம் அல்குர் ஆன் அஸ்ஸுன்னா எ‌ன்ற இரண்டு அடிப்படைகளில் அமைந்துள்ள ஒரு கண்ணியமான மார்க்கமாகும். அந்த அல்குர் ஆணையும் அல்ஹதீஸையும் சரிவரப் புரிந்துக் கொள்ள அதற்கென ‌சில அடிப்படைகள் இருக்கின்றன. 


ஹதீஸ்களை விளங்கவும் அது எடுத்து வைக்கும் ஒவ்வொரு அம்சங்களையும் அணுவணுவாக அலசிடவும் உலமாக்கள் பல அடிப்படைகளை எமக்கு கற்றுத்தந்துள்ளார்கள். அவைகளை நாம் சரிவரப் புரிந்துகொண்டதன் பின்னர் ஹதீஸ்கள் என்ன சொல்கின்றன, அது தரும் போதனைகள் என்ன என்பன போன்ற பல விடயங்களை சரியாகவும் நேராகவும் புரிந்துக் கொள்ள முடியும். 

மார்க்கத்தை முறையாக படிக்க வேண்டும். முறையாக படித்தவர்களிடம் இருந்து , இல்மை சுமந்தவர்கள் என்று சிபாரிசு செய்யப்பட்டவர்களிடம் இருந்து மார்க்கத்தை பெற வேண்டும். இல்லையெனில் வழிகேட்டை விலை கொடுத்து வாங்கிக்கொள்ளும் கதை தான் நமது கதையாகிவிடும். 

எனவே நாம் இந்த  விடயத்தில் கூடிய கவனம் செலுத்துவதோடு அதனை சரிவர நிறைவேற்றி அல்லாஹ்வின் அருளை வெகுமதிகளாக பெற்றுக் கொள்ள முயல்வோமாக.  



எனவே அன்பின் இஸ்லாமிய சகோதரர்களே! அல்குர் ஆணையும் அஸ்ஸுனாவையும் சஹாபாக்களின் விளக்கத்தில் எடுத்துவைக்கும் கருத்துக்களை ந‌ல்ல முறையில் அலசி நேரான பாதையில் செ‌ன்று வெற்றி பெற்றவர்களாக வாழ எம்மனைவருக்கும் அல்லாஹ்  தெளபீக் செய்தருள்வானாக ! 


அல்லாஹ் தான் அறிந்தவன். 

0 comments:

அதிரையில் உடனடி போட்டோ

அதிரையில் உடனடி போட்டோ
இங்கு ஐந்து நிமிடத்தில் உடனடி பாஸ்போர்ட் சைஸ் போட்டோ செய்துதரப்படும். பழைய வெள்ளை படங்களை கலர் படமாக மாற்றி தரப்படும். வீடியோ எடிட்டிங் மற்றும் பிளக்ஸ் செய்துதரப்படும். உடனே வாங்க உங்கள் ரைட்டுக்கு. 78 A,பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு (மீரா மெடிக்கல் எதிரில்) அதிராம்பட்டினம். தொடர்புக்கு போன்:9791381110

SIS computer service

SIS computer service
இங்கு சிறந்த முறையில் உங்களுடைய கம்ப்யூட்டர்கள் சரி செய்து தரப்படும். இங்கு கம்ப்யூட்டர்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் அனைத்தும் கிடைக்கும். தொடர்புக்கு போன்: 9842653248, 9994644163