Monday, April 30, 2012

குடியரசுத் தலைவர் பதவிக்கு போட்டியா?... கொஞ்சம் பொறுமையா இருங்க-கலாம் பதில்!

டெல்லி: குடியரசுத் தலைவர் பதவிக்கு மீண்டும் போட்டியிடுகிறீர்களா என்ற கேள்விக்கு, சற்று பொறுத்திருங்கள், பிறகு கேளுங்கள் சொல்கிறேன் என்று பதிலளித்துள்ளார் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம்.

குடியரசுத் தலைவர் பிரதீபா பாட்டீலின் பதவிக்காலம் முடிவுக்கு வருகிறது. இதையடுத்து அடுத்த குடியரசுத் தலைவர் யார் என்ற எதிர்பார்ப்பு ஏகமாகி வருகிறது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியும், பாஜக தலைமையிலான கூட்டணியும் தங்களுக்குச் சாதகமானவர்களை குடியரசுத் தலைவராக்க தீவிரமாக உள்ளன.

ஒவ்வொரு தரப்பும் ஒருவரது பெயரைப் பரிந்துரைத்து ஆதரவு திரட்ட ஆரம்பித்துள்ளன. காங்கிரஸ் தரப்பி்ல ஹமீத் அன்சாரியின் பெயர் முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு பாஜக தரப்பில் ஆட்சேபனை நிலவுகிறது. ஏன், காங்கிரஸ் கூட்டணியில் இடம் பெற்றுள்ள திரினமூல் காங்கிரஸே அதை ஏற்க மறுத்து வருகிறது.

இந்த நிலையில், மக்களுக்குப் பிடித்தவரான முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமையே மீண்டும் குடியரசுத் தலைவராக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் மக்கள் மத்தியில் மட்டுமல்லாமல், கட்சிகள் மத்தியிலும் அதிகரித்து வருகிறது.

கடந்த 2002 முதல் 2007 வரை குடியரசுத் தலைவராக இருந்தவர்தான் அப்துல் கலாம். அவரது காலகட்டம் என்பது குடியரசுத் தலைவர் பதவியின் பொற்காலம் என்று கூட கூறலாம். அந்த அளவுக்கு மிகச் சிறப்பாக, சுறுசுறுப்பாக, செயல்பட்டவர் கலாம். ஒரு இடத்தில் உட்காராமல் அங்குமிங்கும் ஓடி வந்தவர். அவரது வேகத்திற்கு ஈடு கொடுக்க முடியாமல் அத்தனை பேரும் தடுமாறினர் என்பதே உண்மை.

2007ல் இவரது பதவிக்காலம் முடிந்தபோது மீண்டும் கலாமையே குடியரசுத் தலைவர் பதவிக்கு நியமிக்க பாஜக உள்ளிட்ட கட்சிகள் விரும்பின. ஆனால் காங்கிரஸ், திமுக போன்ற கட்சிகள் அதை விரும்பவில்லை. இதனால் பிரதீபா பாட்டீல் குடியரசுத் தலைவர் பதவிக்கு வர நேரிட்டது.

தற்போது கலாம் பக்கம் பெரும்பாலான கட்சிகள் திரும்பி வருகின்றன. இதனால் காங்கிரஸுக்குப் பெரும் இக்கட்டான நிலை ஏற்பட்டுள்ளது. கலாம் மீது காங்கிரஸுக்கு உள்ள ஒரே அதிருப்தி என்னவென்றால், சோனியா காந்தியை பிரதமர் பதவிக்கு வர முடியாதபடி செய்தவர் என்பதே. எனவே கலாமை மீண்டும் தேர்வு செய்ய அக்கட்சிக்கு பெரும் தயக்கம் காணப்படுகிறது.

ஆனால் கலாமையே தேர்வு செய்ய வேண்டும் என்று ஏகப்பட்ட கட்சிகள் கூற ஆரம்பித்துள்ளதால் அவரே போட்டியிடலாம் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.

இதுகுறித்து கலாம் இதுவரை கருத்துக் கூறாமல் இருந்து வந்தார். இந்த நிலையில், டெல்லியில் அவரை செய்தியாளர்கள் முற்றுகையிட்டு மீண்டும் போட்டியிடப் போகிறீர்களா என்று கேட்டனர். அதற்கு கலாம், சற்றுப் பொறுத்திருங்கள், பிறகு கேளுங்கள், சொல்கிறேன் என்று மட்டும் கூறினார்.

ஆனால் இவரது இந்த பதிலிலேயே ஏகப்பட்ட பதில்கள் பொதிந்திருப்பதாக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கலாம் நிச்சயம் போட்டியிடுவார் என்ற ஊகங்களும் வலுக்க ஆரம்பித்துள்ளன.

ராஷ்டிரபதி பவனில் மீண்டும் மக்கள் ஜனாதிபதி குடியேறுவாரா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

0 comments:

அதிரையில் உடனடி போட்டோ

அதிரையில் உடனடி போட்டோ
இங்கு ஐந்து நிமிடத்தில் உடனடி பாஸ்போர்ட் சைஸ் போட்டோ செய்துதரப்படும். பழைய வெள்ளை படங்களை கலர் படமாக மாற்றி தரப்படும். வீடியோ எடிட்டிங் மற்றும் பிளக்ஸ் செய்துதரப்படும். உடனே வாங்க உங்கள் ரைட்டுக்கு. 78 A,பழைய போஸ்ட் ஆபிஸ் ரோடு (மீரா மெடிக்கல் எதிரில்) அதிராம்பட்டினம். தொடர்புக்கு போன்:9791381110

SIS computer service

SIS computer service
இங்கு சிறந்த முறையில் உங்களுடைய கம்ப்யூட்டர்கள் சரி செய்து தரப்படும். இங்கு கம்ப்யூட்டர்களுக்கு தேவையான உதிரிபாகங்கள் அனைத்தும் கிடைக்கும். தொடர்புக்கு போன்: 9842653248, 9994644163